படிப்பை தொடர முதல்வர் நடவடிக்கை.. தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை..!
படிப்பை தொடர முதல்வர் நடவடிக்கை.. தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை..!
கடன் வாங்கி படிக்கச் சென்ற எங்களை பத்திரமாக மீட்டதுபோல், எங்கள் படிப்பை தொடரவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவி உஷாவின் தந்தை ஐசக் கூறுகையில், “மத்திய - மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மகள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து அனுப்பினேன். இன்னும் 2 மாதத்தில் படிப்பை முடிக்க வேண்டும். டாக்டராக வந்ததும் கடன்களை அடைக்கலாம் என்று நினைத்தேன்.
உக்ரைன் போரால் உடமைகளை எடுக்க முடியாமல் உடுத்திய துணியுடன் வந்துள்ளார். வாழ்க்கை மற்றும் எதிர்காலத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எங்கள் வீட்டு பிள்ளைகளை அழைத்து வந்த முதல்வர், உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் படிப்பை தொடர உதவிட வேண்டும்” என்றார்.
மாணவர் முகமது மன்சூர் கூறுகையில், “கடந்த 4 மாதத்திற்கு முன்னர் உக்ரைனுக்கு சென்றேன். அங்கு போர் தொடங்கியதால் பல்கலைக் கழகத்தில் சான்றிதழ்கள் சிக்கிவிட்டன.
இதனால் என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறி. உக்ரைனுக்கு திரும்பிச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே, தமிழகத்தில் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மாணவி உஷா கூறுகையில், “தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்து வந்த மத்திய அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2 மாதத்தில் படிப்பு முடிய இருந்ததால் காத்திருந்தோம்.
ஆனால் போர் முடியாததால் இங்கே திரும்பி வந்து விட்டோம். உக்ரைனில் உள்ள எங்கள் சான்றிதழ்களை மீட்டு, படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும். வேறு நாட்டிற்கு சென்று படிப்பை தொடர வசதி இல்லை” என்றார்.