கள்ளக்காதலனுக்கு பெற்ற குழந்தை.. ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை.. தாய் உட்பட மூவர் கைது..!
கள்ளக்காதலனுக்கு பெற்ற குழந்தை.. ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை.. தாய் உட்பட மூவர் கைது..!
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் லலிதா. குழந்தைகள் நல குழு உறுப்பினரான இவர், செம்பியம் போலீசாருக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த மனுவில், “பெரம்பூர் அடுத்த செம்பியம் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்த உதயா (29) என்ற பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதம் சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையை, பணத்திற்காக அவர் விற்பனை செய்துள்ளார். எனவே, உதயா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு குறித்து விசாரணை செய்வதற்காக, செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உதயாவை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்தனர்.
அப்போது, உதயா தனது கணவர் மணிகண்டன் என்பவருடன் பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் வசித்து வந்ததாகவும், இவருக்கு 7 வயதில் மகன் உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது.
இந்த நிலையில், உதயாவுக்கு பாபு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையை உதயாவின் தோழியான ஆலந்தூரை சேர்ந்த ஜான்சிராணி (29) என்பவர் மூலம் ஈரோட்டில் வசித்து வரும் சவிதா (42) என்ற பெண்ணுக்கு விற்றதும் உறுதியானது.
சவீதாவுக்கு குழந்தை இல்லை என்பதால் உதயாவுக்கு பிறந்த குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படையினர் ஈரோடு சென்று, சவீதாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர்
இது தொடர்பாக, பிறந்த குழந்தையை விற்ற தாய் உதயா மற்றும் தரகராக செயல்பட்ட ஜான்சிராணி மற்றும் குழந்தையை வாங்கிய சவீதா ஆகிய 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.