கோவை சம்பவமே கடைசி.. போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை..!

கோவை சம்பவமே கடைசி.. போலீசாருக்கு டிஜிபி எச்சரிக்கை..!

Update: 2022-06-07 16:00 GMT

“ஒவ்வொரு போலீஸ்காரரும் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். எவரையும் அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. கோவை சம்பவமே கடைசியாக இருக்கட்டும்” என, டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில், சென்னையில் நள்ளிரவில் நடைபெற்ற போலீசாரின் வாகன சோதனையில் விக்னேஷ் (25) என்பவர் சிக்கினார். இதையடுத்து அவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தார்.

விக்னேஷை, போலீசார் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்திற்கு பின், ‘குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையங்களில் மாலை 6 மணிக்குள் விசாரிக்க வேண்டும். போலீஸ் விசாரணை மரணங்கள் தவிர்க்கப்பட வேண்டும்' என டிஜிபி எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கோவையில் ஸ்விக்கி உணவு விநியோக நிறுவன ஊழியர் மோகனசுந்தரம் (38) என்பவரை போக்குவரத்து போலீஸ்காரர் சதீஷ் (45) கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து, சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், “பொது மக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ்காரரும் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும்.

எவரையும் அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. கோவை சம்பவம் கடைசியாக இருக்கட்டும். இனியும் சட்டத்தை மீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்” என, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News