கல்லூரி மாணவி கடத்தல்.. காருக்குள் நடந்த சம்பவம்.. மூன்று பேர் கைது..!
கல்லூரி மாணவி கடத்தல்.. காருக்குள் நடந்த சம்பவம்.. மூன்று பேர் கைது..!
கோபியை அடுத்த திங்களூர் அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 19 வயது மகள் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த மாணவி, நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது, நிச்சாம்பாளையம் காலனியைச் சேர்ந்த தேவராஜ் (32), தமிழரசன் (24), ராஜன் நகரைச் சேர்ந்த ராஜூ என்கிற சஞ்சான் (35) ஆகிய 3 பேரும் காரில் அங்கு வந்தனர்.
பின்னர் 3 பேரும் இறங்கி மாணவியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். மாணவி கத்தி கூச்சலிட்டும் கார் மின்னல் வேகத்தில் சென்றது. பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் சிலர் இதைப் பார்த்து உடனே திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், காருக்குள் இருந்தபடியே தேவராஜ் அந்த மாணவியின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். உடனே அந்த தாலியை மாணவி கழற்றி வெளியே வீசினார். இதற்கிடையே போலீசார், அனைத்து பகுதி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இந்த நிலையில், கவுந்தப்பாடி - திங்களூர் ரோட்டில் நிச்சாம்பாளையம் அண்ணா நகர் அருகே மாணவி கடத்தப்பட்ட காரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கினர். பின்னர், மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், மாணவியை கடத்திய 3 பேரையும் காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், தேவராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், அவருடைய மனைவி இறந்து விட்டதும், கடத்தப்பட்ட மாணவியின் மீது ஒருதலைக்காதல் கொண்டு அவர் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜ், தமிழரசன், ராஜூ ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.