டெட் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு..!!

டெட் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு..!!

Update: 2022-07-08 05:40 GMT

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று சமீபத்தில் பள்ளிகல்வித்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அப்படி பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கக் கோரி ஏராளமான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு, விரைவில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில், ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரையுள்ள தேதிகளில் தாள் 1-க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் 2-ம் வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் டெட் தேர்வுக்கு பிறகு, வேலை பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Similar News