இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார்..!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார்..!
சென்னையில் வசிப்பவர் முத்து ரமேஷ். அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகியான இவர், ‘ஆன்லைன்’ மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் பலர், தமிழன்னை படங்களை அழகாக, தெய்வமாக வெளியிட்டுள்ளனர்.
அவற்றில் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற நூல்கள், தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாய் காட்சி அளிக்கின்றன.
ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான், தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது, உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல்.
தமிழர்கள் தெய்வமாக வழிபடும் தமிழன்னையின் படத்தை கொச்சையான வெளியிட்ட இசையமைப்பாளர் ரஹ்மான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.