தொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியின் கரையோர மக்களே.. எச்சரிக்கை !!

தொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியின் கரையோர மக்களே.. எச்சரிக்கை !!

Update: 2022-06-21 20:10 GMT

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த ஏரியின் உயரம் 24 அடி என்ற நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக இன்று காலை நிலவரப்படி ஏரியில் 23.48 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை ஆறு மணி நிலவரப்படி ஏரியின் நீர்வரத்து 550 கன அடியாக இருக்கிறது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளால் மழை விட்டு விட்டுப் பெய்வதால் வெள்ள நீர்வரத்து காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.

செம்பரம்பாக்கம் எரியின் பாதுகாப்பான நீர் அளவு 23 அடிதான். ஆனால் அதனையும் தாண்டி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருவதன் காரணமாக இன்று மதியம் 12 மணியளவில் ஏரியிலிருந்து வினாடிக்கு 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும், நீர்வரத்தின் அளவை பொறுத்து உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  செம்பரம்பாக்கம் ஏரியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதன் காரணமாக, நீர் வரும் பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு ஆற்றின் இரண்டு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பாக கரையோரம் வசிக்கும் சென்னை வாசிகளுக்கு மாநகராட்சி சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் மற்றும் திறந்துவிடப்படும் நீரின் அளவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

newstm.in
 
 

Similar News