தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா.. வரும் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்..!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா.. வரும் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்..!
தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் வேகமெடுத்து வரும் சூழலில், மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.
இப்போது அதிகரித்து வரும் புதிய பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இந்தியாவில் இன்று 40 சதவீத கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தலைநகர் டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவு பதிவாகி வருகிறது. தமிழகத்திலும் கூட கடந்த மாதம் முதல் கொரோனா புதிய பாதிப்புகள் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இப்போதுள்ள ‘பிஏ4’, ‘பிஏ5’ போன்ற புதிய பாதிப்புகள் கொரோனா 4ம் அலைக்கான ஆரம்பம் என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எனவே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்றவற்றை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பொது மக்கள் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரும் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் இடங்களில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. மக்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.