வரும் 15 முதல் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து.. முதல்வர் திடீர் அறிவிப்பு..!
வரும் 15 முதல் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து.. முதல்வர் திடீர் அறிவிப்பு..!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி இருந்தன.
இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு ரத்து மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் திரும்பப் பெற்று வருகின்றன.
அந்தவகையில், அசாம் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி முதல் எந்த ஊரடங்கு உத்தரவும் அமலில் இருக்காது; முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட மிக அத்தியாவசிய கட்டுப்பாடுகள் தவிர அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படும் என்று மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “மாநிலத்தில் கொரோனா பரவல் நிலைமையை நாங்கள் கண்காணிப்போம்.
அதன்படி, கொரோனா தொற்று நிலைமை மோசமடையவில்லை என்றால், இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வழக்கமான வகுப்புகளை நடத்த அனுமதிப்போம். பிப்ரவரி 15 வரை காத்திருங்கள்.
மேலும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.
அதே சமயம், அனைத்து பொதுக்கூட்டங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கு செல்ல இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் உள்ள மற்ற முனிசிபல் போர்டு தேர்தல்களுடன், கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் கர்பி அங்லாங் கவுன்சில் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.