பள்ளி தாளாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்றக் காவல்!!

பள்ளி தாளாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேருக்கு நீதிமன்றக் காவல்!!

Update: 2022-07-19 08:21 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

வன்முறை நடந்த இடத்தை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். அப்போது பேசிய டிஜிபி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், ஆனால் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , தான் சரியாக படிப்பதில்லை என மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார். தாய், தந்தைக்கு சாரி சொல்லி அவர் அந்த கடிதத்தை முடித்துள்ளார். இந்த கடித த்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாணவி மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவும் கைது செய்யப்பட்டனர்இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேருக்கு 15நாள் நீதிமன்றக் காவல் வழங்கி ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி முகமது  அலி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Similar News