பயிரையே மேய்ந்த வேலி.. 11 வயது சிறுமி பலாத்காரம்.. வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது..!

பயிரையே மேய்ந்த வேலி.. 11 வயது சிறுமி பலாத்காரம்.. வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது..!

Update: 2022-03-02 11:17 GMT

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கடுபுகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அந்தப் பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து மகள்களுடன் தனியே வசித்து வந்தார்.

கூலி வேலை செய்து வந்த அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பெண், கிருஷ்ணனை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர், தனது 2 மகள்கள் மற்றும் கிருஷ்ணனுடன் வசித்து வந்தார்.

தனது மகள்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து கிருஷ்ணனின் அரவணைப்பில் தனது மகள்களை விட்டுவிட்டு அந்தப் பெண் வேலைக்கு சென்று வந்தார்.

ஆனால், தந்தையாக இருந்து பாதுகாக்க வேண்டிய கிருஷ்ணன், அந்த பெண்ணின் மூத்த மகளான 11 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுபற்றி அந்த சிறுமி, தனது தாயிடம் கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கிருஷ்ணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 11 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். பாதுகாப்பாக இருக்க வேண்டிய வளர்ப்பு தந்தையே மகளை பலாத்காரம் செய்ததை கேட்டு அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், இதுகுறித்து கிருஷ்ணனிடம் கேட்டு அந்தப் பெண் தகராறு செய்துள்ளார். இதனால், கிருஷ்ணன் அந்த பெண்ணையும் தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து பாலே ஒன்னூர் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. 

இதையடுத்து போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News