மணிக்கு 40 - 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மணிக்கு 40 - 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Update: 2022-07-01 15:01 GMT

வரும் 4-ம் தேதி வரை, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் , இன்று (1-ம் தேதி) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (2-ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று (1-ம் தேதி) முதல் வரும் 4-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

அதுபோல், இன்று (1-ம் தேதி) முதல் வரும் 3-ம் தேதி வரை குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News