சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் கருகி பலி..!

சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் கருகி பலி..!

Update: 2022-03-22 18:12 GMT

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா பகீரனகட்டேயில் பழைய இரும்பு கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் தொழிலாளிகள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த 2 காஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

கடையில் இருந்த பழைய பொருட்கள் மீதும் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. கடையில் இருந்து புகை கிளம்பியது. அருகில் இருந்தவர்கள் காபு போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் கடையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.

மேலும், மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். எனினும், கடையில் இருந்த பழைய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.

இந்த விபத்தில் அந்த கடையில் இருந்த 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். அங்கு வந்த காபு போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த 3 பேரை மற்றொரு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து காபு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, தீ விபத்தில் இறந்தவர்கள் சந்திரா நகரை சேர்ந்த ரஜாப் மற்றும் மல்லாரு பகுதியை சேர்ந்த ரசாக், நியாஸ் என்பதும், கடையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

Similar News