திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை..!

திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை..!

Update: 2022-07-08 19:10 GMT

திருநெல்வேலி மகாராஜநகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பரமசிவன் அய்யப்பன். இவரிடம், நெல்லை தியாகராஜ நகரை சேர்ந்த துரை என்பவர் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில், பரமசிவன் அய்யப்பன் இன்று துரையிடம் வங்கியில் இருந்து பணம் எடுத்து வரக் கூறினாராம்.

இதையடுத்து துரை, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள 2 வங்கிகளில் சுமார் ரூ.17 லட்சம் எடுத்து வந்தாராம். மேலும், மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, ஏற்கனவே எடுத்த ரூ.17 லட்சத்தை காரின் முன்பக்க இருக்கையில் ஒரு பையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது, அடையாளம் தெரியாத யாரோ காரின் முன்பக்க கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்து, அங்கிருந்த ரூ.17 லட்சத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லையில், பட்டப்பகலில் திமுக பிரமுகர் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News