திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது - அண்ணாமலை..!!

திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது - அண்ணாமலை..!!

Update: 2022-05-17 04:30 GMT

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலி வாடிகனில் போப் பிரான்சிஸ் அவர்களால் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்ச்சியில் வாடிகன் நகரில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது, தமிழ் தாய் பாடல் வாடிகனில் ஒலித்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் அதற்கான வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்த தமிழன் தமிழணங்கு ஓவியத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே என்று பதிவிட்டு அதோடு புதிதாக தமிழ்த்தாயின் ஒரு ஓவியத்தையும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில், “தமிழணங்கை போற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ் எழுத்துகளுடன் 'ஸ'வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கைகளுள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதை தான் தொழுத கையுள்ளம் படை ஒருங்கும் என வள்ளுவர் அடையாளம் காட்டிவிட்டு போனார்” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன்.

“தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழ்நாட்டு முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது. “ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும்.


அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Similar News