மாணவி ஸ்ரீமதி மரணம்.. வதந்தி பரப்பும் வலைதள பக்கங்களை முடக்க நடவடிக்கை..!
மாணவி ஸ்ரீமதி மரணம்.. வதந்தி பரப்பும் வலைதள பக்கங்களை முடக்க நடவடிக்கை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், 4வது நாளாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதன்போது, பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை சூறையாடினர். பள்ளி வாகனம் மற்றும் காவல்துறை வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பள்ளியில் உள்ள பொருட்களை சூறையாடினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும், பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிறப்பு குழு அமைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருவதால், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்பி பகலவன் தலைமையிலான தனிப்படை இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. வதந்திகளை பரப்பிய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.