143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு.. மக்கள் அதிர்ச்சி
143 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு.. மக்கள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அப்பளம், வெல்லம், சாக்லெட் உள்ளிட்ட 143 அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%, 18%, 28% என 4 பிரிவுகளில் வரி வசூலிக்கப்படுகிறது. தங்கத்துக்கு மட்டும் 3% என்ற தனி பிரிவு உள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ.1.42 லட்சம் கோடி வரி வசூலானது. ஆனால், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய பல கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் சுமார் 1,300 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில், மேலும் 143 அத்தியாவசிய பொருட்களின் வரி அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அப்பளம், சாக்லெட், வெல்லம், கலர் டிவி என அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பொருட்களின் வரி விகிதங்கள் உயர்த்தப்பட உள்ளன. அதாவது, 143 பொருட்களில் 92 சதவீத பொருட்கள், 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீத வரி பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. தற்போது, சொகுசு பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவுக்குள் உள்ளன.
அப்பளம், வெல்லம் போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவைகள் 5 சதவீத வரம்புக்குள் கொண்டு வரப்பட உள்ளன. தோல் ஆடைகள் மற்றும் அணிகலன்கள், ஷேவிங் ரேசர்கள், கைக்கடிகாரங்கள், ஆப்டர் ஷேவ் திரவியங்கள், வாசனை திரவியங்கள், பல் துலக்கும் திரவங்கள், வேபில்ஸ், சாக்லேட்டுகள், கோகோ பவுடர், சாறுகள் மற்றும் காபி, கைப்பைகள், ஷாப்பிங் பைகள், மது அல்லாத பானங்கள், செராமிக் ஷிங்குகள், வாஷ்பேசின்கள், பிளைவுட், கதவுகள், ஜன்னல்கள், மின் சாதனங்கள் (சுவிட்சுகள், சாக்கெட்டுகள் போன்றவை) உள்ளிட்ட 125 பொருட்கள் ஜிஎஸ்டி வரியில் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
அடுத்த மாதம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இதில், இந்த வரி உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in