இதையெல்லாம் பார்க்கவா மக்கள் ஓட்டு போட்டார்கள்..?: கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

இதையெல்லாம் பார்க்கவா மக்கள் ஓட்டு போட்டார்கள்..?: கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி..!

Update: 2022-02-07 17:37 GMT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சிவகாசி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்தில் அமைந்துள்ள திமுக ஆட்சி இதுவரை எந்த திட்டத்தையும் புதிதாக செய்ததாக தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத்தான் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாம் உருவாக்கிய திட்டங்களுக்குத்தான் அவர் அடிக்கல் நாட்டுகிறார். வேறு எதையும் இதுவரை திமுக அரசு செய்யவில்லை.


ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது படத்துடன் பத்திரிகைகளில் செய்தியாக முதல் நாள் வருகிறது. மறுநாள், நடைபயணம் சென்றார் என செய்தி வருகிறது. அதற்கு அடுத்த நாள் சைக்கிள் ஓட்டுகிறார், உடற்பயிற்சி கூடம் சென்று உடற்பயிற்சி செய்கிறார் என செய்தி வருகிறது.

இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு உங்களை முதல்வர் ஆக்கினார்கள்..? இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்..? கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி முதல்வர் ஆனவர் ஸ்டாலின். இப்படி செய்தவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்..? நிச்சயம் செய்ய மாட்டார்.

கொரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 கொடுத்தோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், ‘ரூ.5 ஆயிரம் கொடுத்தால் என்ன..?’ என்றார். ஆனால் தற்போது அவர் ஆட்சியில் இருக்கும்போது 100 ரூபாயாவது கொடுத்துள்ளாரா..?

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்திடுவேன் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார். ஆனால் அதனை ரத்து செய்தாரா..? திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அவர்களிடம் தர்மத்தை எதிர்பார்க்க முடியாது” என அவர் பேசினார்.

Similar News