சிறுவனை விழுங்கியதா இந்த ராட்சத முதலை..? நடந்தது என்ன ?

சிறுவனை விழுங்கியதா இந்த ராட்சத முதலை..? நடந்தது என்ன ?

Update: 2022-07-14 05:15 GMT

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷியோபூர் என்ற பகுதியில் ரகுநாத்பூர் கிராமத்தில் உள்ள சம்பல் குளத்தில் அந்தர் சிங் என்ற 7 வயது சிறுவன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குளத்தில் இருந்த முதலை ஒன்று, அந்த சிறுவனை கவ்வியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த சிறுவனை மீட்க முயற்சித்தபோது, அந்த முதலை சிறுவனை விழுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குச்சிகள், கயிறு மற்றும் வலை மூலம் முதலையை பிடித்த பொதுமக்கள், ராட்சத முதலை விழுங்கியதாக கிராமத்தினர் முதலையை ஆற்றிலிருந்து பிடித்து கரையில் கொண்டு வந்து போட்டனர்.

இதனிடையே இது தொடர்பாக தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் இருந்து முதலையை பத்திரமாக மீட்பதில் முயற்சி செய்தனர். ஆனால் அந்த ஊர் பொதுமக்களும், சிறுவனின் பெற்றோர்களும் முதலையின் வயிற்றை அறுத்து சிறுவனை மீட்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தனர்.

இதற்கிடையில் சம்பல் நதியின் ஆழமான பகுதிக்கு 7வயது சிறுவன் நீந்தச் சென்றதால் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று எஸ்.டி.ஆர்.எப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர், ஆனால் கிராமத்தினரோ முதலையை கிழிக்கும் வரை அதை விட மாட்டோம் என்று சிறைப்பிடித்து வைத்தனர். நதியில் தேடச்சென்ற குழுவும் நேற்று காலை வரை பையன் கிடைக்காததால் தேடலையும் நிறுத்தி விட்டனர்.

பையனை முதலை விழுங்காது என்று எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரிகளும் வலியுறுத்தி முதலையை தங்களிடம் விடுமாறு வலியுறுத்தினர், ஆனால் கிராமத்தினர் முதலைகள் மனிதனை உண்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பல் ஆற்றில் நிறைய முதலைகள் இருப்பதாகவும் புகார் அளித்தனர்.

சில கிராமத்தினர் பையனை முதலை விழுங்கியதை நேரில் கண்டதாகவும் கூறுகின்றனர். இவர்கள்தான் சிறுவனின் குடும்பத்தினரை அழைத்ததாகவும் தெரிகிறது. அதன் பிறகுதான் பெரிய வலை, கம்பு, தடிகள் சகிதம் முதலையை தண்ணீரிலிருந்து பிடித்து கரையில் கொண்டு போட்டுள்ளனர். இதையடுத்து நீண்ட முயற்சிக்கு பிறகு, பொதுமக்கள் முதலையை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ரகுநாத்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “7 வயது சிறுவன் அந்தர் சிங், ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கியிருக்கலாம். ஆனால் சிறுவனை முதலை விழுங்கியதாக எண்ணி, பொதுமக்கள் அதனை அறுக்க நினைத்தனர். தற்போது அவர்களை சமாதானப்படுத்தி, முதலையை நாங்கள் மீட்டுள்ளோம். மேலும் சிறுவனை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.

Tags:    

Similar News