பட்டியலின மக்கள் குறித்து இழிவான பேச்சு.. திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை.. புரட்சி பாரதம் புகார்..!
பட்டியலின மக்கள் குறித்து இழிவான பேச்சு.. திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை.. புரட்சி பாரதம் புகார்..!
திருவள்ளூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 18-ம் தேதி மாலை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில கொள்ளை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனி பேசினார்.
அப்போது, ‘சட்டை கழற்றி அல்லையில் வச்சுக்கிட்டு நடந்து போன சமுதாயம், செருப்பை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு போன சமுதாயத்தை வணக்கத்துக்குரிய மேயர் என்று சொல்ல வைத்தது யார்..?’ என, பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.
இது, சமூக வலைதளங்கள் மூலம் பரவி தமிழகம் முழுவதும் பட்டியலின சமூக மக்களின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அறிவுலக மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி ரிசர்வேஷன் அடிப்படையில் பல இடங்களில் பட்டியலின மக்கள் இருபாலரும் மாநகராட்சி மேயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத திண்டுக்கல் ஐ.லியோனி ஒட்டு மொத்த பட்டியல் இனத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாதிய வன்முறையை தூண்டும் வகையிலும், பட்டியல் இன மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையிலும், பொது வெளியில் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.
இதனால், திண்டுக்கல் ஐ.லியோனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படியும், இதர சட்டப்பிரிவுகளின் படியும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய லியோனியை பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இது தொடர்பாக கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளனர்.