தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு..!!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், முதல்வர் தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், திமுக ஆட்சி புதிதாக பொறுப்பேற்ற பின், இதுவரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள், பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மாநாடு நடத்தப்பட உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 3 நாட்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 10) முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
முதல் நாள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த மாநாடும், அதன் பின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒரு நாள், காவல் கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஒரு நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிவார்.
அதேப்போல், மாநாட்டின் முடிவில், சில திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவதோடு, சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கவுரவிக்கப்படுவர், என கூறப்படுகிறது.