இந்த சாக்லெட்டை சாப்பிடாதீங்க.. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!
இந்த சாக்லெட்டை சாப்பிடாதீங்க.. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!
தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள் விவரம் என, எந்த ஒரு விவரமும் இல்லாமல், குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ‘சிரிஞ்ச் சாக்லெட்’களை விற்பனை செய்யக்கூடாது என, வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘டில்லியில் இருந்து சில மாதங்களுக்கு முன், ‘சிரிஞ்ச்’ வடிவிலான சாக்லெட் விற்பனைக்கு வந்துள்ளது.
பெட்டிக்கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த சாக்லெட்டுகளை பகுப்பாய்வு செய்ததில், அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள் என எந்த ஒரு விவரமும் இல்லாத ‘சிரிஞ்ச் சாக்லெட்’களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டில்லியில் இருந்து இந்த சாக்லெட் எப்படி விற்பனைக்கு வந்தது என்று ஆய்வு செய்து வருகிறோம். 2020-ம் ஆண்டு முதல் 1,215 கடைகளில் ஆய்வு நடத்தியுள்ளோம்.
கூடுதல் நிறம் சேர்த்த சாக்லெட் விற்ற, 16 கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில், 12 கடை உரிமையாளர்களுக்கு, 1.73 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு வழக்குகள் விசாரணையில் உள்ளன.
குழந்தைகளுக்கு ஆபத்தான சாக்லெட்டுகளை விற்பனை செய்தால், உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது’ என்று அவர்கள் கூறினர்.