இனி இந்த பொருட்கள் திருப்பதியில் பயன்படுத்தாதீங்க..!!
இனி இந்த பொருட்கள் திருப்பதியில் பயன்படுத்தாதீங்க..!!
திருப்பதியில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் சுமார் 48 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், ஷாம்பு பாக்கெட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கொண்டு செல்லக்கூடாது. ஏனெனில் பக்தர்கள் வருகையால் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சூழல் மாசு அடைவதாக தேவஸ்தான போர்டு குற்றம் சாட்டி உள்ளது.
அதன்படி, திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் தனி நபர்கள் அவர்களின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் திருமலையை சுற்றியுள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மக்கும் பொருட்கள் மற்றும் காகித அட்டைகள், காகித கப்புகளை பயன்படுத்த தேவஸ்தான உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் திருமலையை சுற்றி இயங்கி வரும் அனைத்து வகையான ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் குப்பைகளை தனித்தனியாக பிரித்து தொட்டிகளில் போட வேண்டும் என்றும், பிளாஸ்டிக் இல்லாத மக்கும் கவர்களை பக்தர்களுக்கு அதிக விலையில் விற்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பு பலகையை ஒவ்வொரு ஓட்டலின் முன்பும் வைக்க வேண்டும் தேவஸ்தானம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுகளை மீறி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், விஜிலென்ஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.