நடப்பு நிதியாண்டில் பத்திரப்பதிவு வருவாய் எவ்வளவு தெரியுமா..?: பதிவுத் துறை செயலர் தகவல்..!
நடப்பு நிதியாண்டில் பத்திரப்பதிவு வருவாய் எவ்வளவு தெரியுமா..?: பதிவுத் துறை செயலர் தகவல்..!
பதிவுத்துறையில் நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ரூ.10,785.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பதிவுத் துறையில் நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ரூ.10,785.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகமாகும்.
அதாவது, 2018 - 2019 ஜனவரி வரை ரூ.8,937.45 கோடியாகவும், 2019 - 2020 ஜனவரி வரை ரூ.9,145.06 கோடியாகவும், கடந்த நிதியாண்டில் ஜனவரி வரை ரூ.7,927.30 கோடியாகவும் வருவாய் இருந்தது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து மண்டலங்களிலும் பதிவுத்துறை பணி சீராய்வுக் கூட்டங்கள், காணொலி காட்சி மூலம் வாராந்திர கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கூட்டங்களில் அரசின் வருவாயை எவ்வித விடுதலும் இல்லாமல் வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும், தணிக்கை இழப்புகளை வசூலிக்க வேண்டும் என்றும் கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, பேரிடர் ஏதும் இல்லாத காலத்தில் பெறப்பட்ட வருவாயை விட கடந்த ஜனவரி மாதத்தில் பதிவுத் துறையின் வருவாய் அதிகரித்துள்ளது” என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.