ரஷ்யாவுக்கு ஆதரவா? - விளைவுகள் மோசமாக இருக்கும் என சீனாவை மிரட்டிய பைடன் !
ரஷ்யாவுக்கு ஆதரவா? - விளைவுகள் மோசமாக இருக்கும் என சீனாவை மிரட்டிய பைடன் !
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என சீனாவை எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்திவரும் தாக்குதல் மூன்று வாரத்தை நிறைவு செய்து, நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இதில் உக்ரைனின் பெரும்பாலான அரசு கட்டிடங்கள் சேதமடைந்துவிட்டன. தற்போது குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. நாளுக்குநாள் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தரப்பில் இருந்து சீனாவிடம் ராணுவ, பொருளாதார உதவிகள் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என சீனாவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கைக்கு சீன தரப்பில் என்ன கூறப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.
சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிபர் ஜி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டனர். அப்போது சீனா தரப்பில், உக்ரைன் போரை சீனா விரும்பவில்லை. உலக நாடுகள் எந்தப் பிரச்சினையையும் நேரில் சந்தித்துப் பேசித் தீர்க்க வேண்டும். போர்க்களத்தில் சந்திப்புகள் கூடாது. மோதலும், போரும் யாருக்கும் நன்மை பயக்காது. அமைதியும், பாதுகாப்பும் தான் சர்வதேச சமூகம் போற்றிப் பாதுகாக்க வேண்டியவை என்று தெரிவிக்கப்பட்டது என்றார்.
அதேபோல் தைவான் பிரச்சினையில் தவறான வழிநடத்தல்கள் அமெரிக்காவுடனான நல்லுவறை முறிக்கும் என்று ஜி ஜின்பிங் எச்சரித்ததாகவும் கூறினார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி பேசுகையில், உக்ரைன் விவகாரத்தில் சீனா எடுக்கும் நிலைப்பாட்டின்படி தான் வரலாற்றுப் புத்தகத்தில் அதன் பக்கங்கள் எழுதப்படும். அதை சீனா உணர்ந்து கொள்ள வேண்டும், என்றார்.
newstm.in