பெற்றோர்களின் கவனக்குறைவால் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர்!!

பெற்றோர்களின் கவனக்குறைவால் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர்!!

Update: 2022-06-09 12:11 GMT

4 வயது குழந்தை ஒன்று வழக்கம் போல் காலையில்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.அப்போது, தனது கழுத்தில் அணிந்திருந்த செயினின் உலோக டாலரை தவறுதலாக விழுங்கியுள்ளது. அதையடுத்து அந்தக் குழந்தை உணவு சாப்பிட முடியாமலும், மூச்சு விட முடியாமலும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியது.

தொடர்ந்து, குழந்தையை சோதனையிட்ட பெற்றோர், குழந்தை உலோக டாலரை விழுங்கியதைக் கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அந்த குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த குழந்தைக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் உலோக டாலர் இருப்பதை மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் நேருவின் அறிவுறுத்தலின் பேரில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள் சிவசங்கரி, சந்தான கிருஷ்ணகுமார், ராபின் ரிச்சர்ட்ஸ் மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழு பலராமகிருஷ்ணன், சுகிர்த்ராஜ் ஆகியோர் அடங்கிய அவசர மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

தொடர்ந்து உணவுக்குழாய் உள்நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண் டையில் இருந்த உலோக டாலரை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவ குழுவினரை டீன் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணைகண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Similar News