இரட்டை பட்டம் இதற்குதான்.. யுஜிசி தலைவர் விளக்கம்..!

இரட்டை பட்டம் இதற்குதான்.. யுஜிசி தலைவர் விளக்கம்..!

Update: 2022-04-19 11:30 GMT

சமீபத்தில், ‘மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூரக் கல்வி முறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதி நேர முறை மூலமாகவோ தொடரலாம்’ என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளவே, ஒரே நேரத்தில் இரட்டை பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் எம்.ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: “மாணவர்கள் தங்களுடைய பன்முகத் திறமையை வளர்த்துக் கொள்ளவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மாணவர்கள் தங்களுடைய திறமை, எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்களுடைய கல்வித் தகுதியை சுயமாக நிர்ணயித்துக் கொள்ள முடியும். ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளுக்கான பாடங்களை எப்படி படிப்பது என்ற கேள்வி எழலாம்.

ஒரு பட்டப் படிப்பை காலை நேர கல்லூரியிலும், அதே கல்லூரியில் அல்லது மற்றொரு கல்லூரியில் மாலை நேரத்தில் மற்றொரு பட்டப்படிப்பையும் தொடரலாம். அல்லது, ஒரு பட்டப்படிப்பை கல்லூரியிலும், மற்றொன்றை 'ஆன்லைன்' மூலமாகவும் படிக்க முடியும்.

ஒரு மாணவரே இரண்டு படிப்புகளில் சேர்வதால், மற்றொரு மாணவருக்கான வாய்ப்பு பறிபோகாது. ஒரு பட்டப் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கே கல்லூரிகளில் முன்னுரிமை தர வேண்டும்.

காலியாக உள்ள இடங்களில் மட்டுமே இரட்டை பட்டப்படிப்பு மாணவர்களை சேர்க்க வேண்டும். இரட்டை பட்டப்படிப்பு கட்டாயமில்லை; ஆர்வமுள்ளவர்கள் மட்டும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

Similar News