அதிமுகவில் இரட்டை தலைமை.. திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..!
அதிமுகவில் இரட்டை தலைமை.. திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒரு இலையில் ஓ.பன்னீர்செல்வம் படமும், மற்றொரு இலையில் எடப்பாடி பழனிச்சாமி படத்தையும் அச்சிட்டு முன்னாள் அமைச்சர் ஒட்டியுள்ள போஸ்டர் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து சென்னை வானகரத்தில் கடந்த 23-ம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பை ஓரங்கட்டியது. இதனால், எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பனிப்போர் உச்சத்தை தொட்டது.
மேலும், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் போன்றவர்களை தவிர, பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாநகரப் பகுதியில் வெல்லமண்டி நடராஜன், அவருடைய மகன் ஜவஹர்லால் நேரு ஆகியோர் சார்பில் இரட்டை இலையுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், அதிமுகவில் இரட்டை தலைமை என்பதை குறிக்கும் வகையில், ஒரு இலையில் ஓ.பன்னீர்செல்வம் படத்தையும், இன்னொரு இலையில் எடப்பாடி பழனிசாமி படத்தையும் அச்சிட்டு, ‘தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில், அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.