இரட்டை இலை சின்னம் வழக்கு.. விசாரணைக்கு பயந்து முக்கிய சாட்சி தற்கோலை முடிவு
இரட்டை இலை சின்னம் வழக்கு.. விசாரணைக்கு பயந்து முக்கிய சாட்சி தற்கோலை முடிவு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால், அதிமுக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நடந்தது அனைவரும் அறிந்தது. பின்னர் அதிமுக இரண்டு அணிகள் உருவானது. அந்த சமயத்தில் நடைபெற்ற ஆர். கே நகர் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இதனால், இந்தியத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இங்கு தான் சிக்கல் எழுந்தது. அதாவது, அந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி அணிக்குப் பெற்றுத்தர டி.டி.வி. தினகரன் முயற்சி செய்ததாகவும், சின்னத்தைப் பெறுவதற்கு பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டில், டி.டி.வி. தினகரன், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தினகரன் ஜாமினில் விடுதலையானார்.
இந்நிலையில் சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபிநாத் (31). டி.டி.வி. தினகரன் சுகேஷிடம் பணம் கொடுத்தபோது கோபிநாத் உடனிருந்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கோபிநாத்தை நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
வழக்கறிஞர் மோகன்ராஜின் ஜூனியர் தான் இந்த கோபிநாத் என்பதால், விசாரணைக்கு நாளை டெல்லியில் ஆஜராக அமலாக்கத்துறை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வழக்கறிஞர்ன கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (31), பாமக திருவேற்காடு அமைப்பு செயலாளராகவும், பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார். நேற்றிரவு தூங்க செல்வதாகக் கூறி, வீட்டின் எதிரே உள்ள குடிசைக்கு சென்றார்.
இந்நிலையில், இன்று காலை கோபிநாத்தின் சகோதரி சென்று பார்த்த போது, குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார், கோபிநாத்தின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
newstm.in