வாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!

வாகன ஓட்டிகளே உஷார்.. நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!

Update: 2022-06-03 11:52 GMT

பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு,  நாளை (4-ம் தேதி) முதல் 10 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, பழைய மகாபலிபுரம் சாலை இந்திரா நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் ஓ.எம்.ஆர் சர்வீஸ் சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடது புறம் திரும்பி சர்தார் பட்டேல் சாலையை அடைந்து காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் யூடர்ன் திரும்பி மீண்டும் சர்தார் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடைந்து அவரவர் இலக்கை அடையலாம்.

அல்லது, பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகர் 2வது அவென்யூ (வாட்டர் டேங்க் சாலை) இந்திரா நகர் 1வது அவென்யூ சந்திப்பு வழியாக எல்.பி.ரோட்டை அடையலாம்.

அதேபோல், சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பு அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பட்டுல்லாஸ் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக அண்ணா சாலை செல்லலாம்.

ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம். டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடைய அனுமதிக்கப்படும்.

மேலும் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுல்லாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் ரோட்டிற்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் கடை எதிரே யூடர்ன் செய்து ஸ்பென்சர் சந்திப்பு நோக்கி செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்தால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News