துபாய் பயண வெற்றி.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேலும் பல நாடுகளில் இருந்து அழைப்பு !!
துபாய் பயண வெற்றி.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேலும் பல நாடுகளில் இருந்து அழைப்பு !!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி ஐக்கிர அரபு அமீரகத்திற்குச் சென்றார். அங்கு துபாய், அபுதாபி நாடுகளுக்குச் சென்ற அவர் இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்களைச் சந்தித்து பல்வேறு முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், முதல்வரின் இந்த பயணத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தமிழகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் இதுவரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய காலணி தொழிற்சாலையை நாளை திண்டிவனத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஐக்கிய அமீரக அரபு நாடுகளைத் தொடந்து அமெரிக்கா, தென்கொரிய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்து தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகளை தமிழக தொழில்துறை பயன்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும், எலக்ட்ரிக் பைக், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது, அதேபோல வெளிநாட்டு வாழ் தமிழர்களும் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
newstm.in