சமையல் எண்ணெய் விலை மேலும் ரூ.10 குறைகிறது?

சமையல் எண்ணெய் விலை மேலும் ரூ.10 குறைகிறது?

Update: 2022-07-07 08:55 GMT

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம் இறக்குமதியை தான் நம்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை  அதிகரித்து வந்ததால் இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்து வந்தது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிரமத்தைத எதிர்கொண்டனர். மேலும் விலையை குறைக்க கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், சமீபகாலமாக சமையல் எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருகிறது. அதனால், இந்தியாவில் கடந்த மாதம்  லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன் பிறகும் சர்வதேச சந்தை விலை குறைந்திருப்பதால், அதுபற்றி விவாதிக்க மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டினார்.

இந்த கூட்டத்தில் எண்ணெய் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்தாக கூறப்படுகிறது. கூட்டத்துக்கு பிறகு பேட்டியளித்த சுதன்சு பாண்டே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு வலியுறுத்தினோம். அதாவது விலையை 10 ரூபாய் குறைக்குமாறு கூறினோம்.

இதனை ஏற்று பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.10 குறைப்பதாக உறுதி அளித்தனர். இந்த எண்ணெய்கள் விலை குறைந்தால், இதர சமையல் எண்ணெய்கள் விலையும் குறைந்துவிடும்.

மேலும், ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூ.3 முதல் ரூ.5 வரை வேறுபாடாக இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரி விலையை நிர்ணயிக்குமாறு கூறினோம். அதனை அவர்களும் ஒப்புக்கொண்டனர், என அவர் கூறினார்.
 
newstm.in

Tags:    

Similar News