மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்..!
மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்..!
சென்னையை அடுத்த பாடியில், திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக அரசு ஓராண்டில் நிறைவேற்றியுள்ளது குறித்தும், மக்கள் நலத் திட்டங்களை குறித்தும் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் பேசுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படவில்லை. 5 லட்சம் கோடி கடன் இருந்தது. அப்போது வருவாய் பற்றாக்குறை 4.6% என இருந்தது. தற்போது முதல்வர் அதை 3.8% அளவிற்கு குறைத்துள்ளார்.
கடந்த 10 வருடம் பேரவையில் என்ன நடந்தது என்பது வெளியில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தற்போது, பேரவையில் என்ன என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக கொடுக்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு வருடம் பள்ளி இல்லாத சூழலால் மாணவர்கள் எப்படி எழுத வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் மறந்து விட்டார். இதனை மீளுருவாக்கம் செய்ய முதல்வருக்கு தோன்றிய திட்டம்தான் இல்லம் தேடி கல்வி திட்டம்.
படிப்பை பொறுத்தவரை, பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை உண்டு.
ஆகவே, உங்கள் குழந்தைக்கு என்ன திறமை என்பதை அவர்களிடம் கேளுங்கள். பிள்ளைகளை மகிழ்ச்சியாக படிக்க விடுங்கள். இக்கருத்து என்னுடையது மட்டுமல்ல. முதல்வரும் இதையே கேட்டுக்கொண்டுள்ளார்” என்றார்.