உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Update: 2022-02-20 23:02 GMT

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,489 பேரூராட்சிகளில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,820 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

ஏற்கனவே, 218 வார்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு பெற்ற நிலையில், மீதமுள்ள வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 57,746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் பணியில 1.32 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக சுமார் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பேரூராட்சிகளில் மொத்தம் 74.68 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் மொத்தம் 68.22 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநகராட்சிகளில் மொத்தம் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மாநகராட்சிகளில் அதிக பட்சமாக கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மிக குறைந்த அளவாக சென்னை மாநகராட்சியில் மொத்தம் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வருகிற 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Similar News