தேர்தல் ஆணையம் ரோபோ... திமுகவிடம் ரிமோட்! ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!
தேர்தல் ஆணையம் ரோபோ... திமுகவிடம் ரிமோட்! ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “போலீஸ் கமிஷனரை சந்தித்து இரண்டு முக்கியமான கோரிக்கைகளை தெரிவித்துள்ளேன்.
சென்னையில் ரவுடிகளை ஏவி விட்டு, கலவரத்தை உண்டாக்கி, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பூத் ஏஜெண்டுகளை மிரட்டுவது உள்ளிட்ட அராஜகங்களில் ஈடுபட ஆளுங்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்றும், எனவே பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டுள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் ஆள்கடத்தல், வேட்பாளர்களை மிரட்டுதல், வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்தல் போன்ற அராஜக செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
மாநில தேர்தல் ஆணையம் ரோபோ போல செயல்படுகிறது. அதன் ரிமோட் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உள்ளது. அவர் சொல்வது போல்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை தேடி தருவார்கள். மாநிலம் முழுவதும் இரட்டை இலை அலை வீசுகிறது.” என்றார்.