தமிழகத்தில் 510 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று தேர்தல்!!
தமிழகத்தில் 510 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று தேர்தல்!!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே, உறுப்பினர்களில் ஒருசிலர் உயிரிழந்ததாலும் பதவி விலகியதாலும் பதவிகள் காலியாகின.
இந்த பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் என 34 இடங்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆயிரத்து 22 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா, நுண் பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. பதிவான வாக்குகள் வரும் 12ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
newstm.in