காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்.. அமைச்சர் மெய்யநாதன் தகவல்..!
காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்.. அமைச்சர் மெய்யநாதன் தகவல்..!
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் தேசிய அளவிலான சுத்தமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தென்மாநிலங்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “தமிழகத்தில் இதுவரை 14 வகையான பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் 174 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் தொடங்கி இருக்கிறார்.
பிளாஸ்டிக் எதில் கலந்தாலும் மாசு ஏற்படுகிறது. நிலம், கடல் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் கூட விதித்து இருக்கிறோம். அதை அதிகப்படுத்தவும் முடிவு எடுத்து இருக்கிறோம்.
இரண்டு ஆண்டிற்குள் குப்பைகளை பிரித்து எடுக்க கூடிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 59 இடங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வருட காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குப்பைகளையும் பிரித்தெடுக்கும் பணி முடிக்கப்படும்.
நீர்நிலைகளில் கழிவுகளை கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து திடக்கழிவு மேலாண்மை செய்வதற்காக, தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க கூடிய பணியானது விரைவில் நடைபெற இருக்கிறது” என்று தெரிவித்தார்.