இலங்கையில் திரும்பப் பெறப்பட்ட அவசர நிலை!!

இலங்கையில் திரும்பப் பெறப்பட்ட அவசர நிலை!!

Update: 2022-04-06 07:39 GMT

இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு நாட்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் இருந்த அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து, நிலைமையை கையாளும் விதமாக 4 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது.

அதில், புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுக் கொண்டார். ஆனால் பதவியேற்ற 24 மணி நேரத்தில் அவர் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வரலாறு காணாத நிதி நெருக்கடியை சமாளிக்க இடைக்கால ஏற்பாட்டை செய்யுமாறு அவர் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே மக்களின் இயல்பு வாழ்க்கை, நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஒரு புறம் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் என எரிபொருட்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலில், மறுபுறம் அரசைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச வீடு முன்பு, மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தச் சூழலில் பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதிக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News