பரபரப்பு.. கைதிகளுக்கு கஞ்சா சப்ளை.. சிக்கினார் சிறை ஊழியர்..!

பரபரப்பு.. கைதிகளுக்கு கஞ்சா சப்ளை.. சிக்கினார் சிறை ஊழியர்..!

Update: 2022-02-04 18:34 GMT

சிறையில் உள்ள கைதிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதையடுத்து, சிறையில் அடிக்கடி போலீசார் சோதனை நடத்தி, கைதிகளிடம் இருந்து கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், கைதிகளுக்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்வதில் சிறைகளில் பணியாற்றும் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதையடுத்து, சிறைக்கு வரும் ஒவ்வொருவரும் முழுமையாக சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் ஊழியரான கங்காதர் (53) என்பவர் வழக்கம் போல வேலைக்கு வந்தார்.

கங்காதரின் நடவடிக்கை மீது சிறை அதிகாாிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, ஊழியர் கங்காதரை பிடித்து சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவருடைய உள்ளாடைக்குள் கஞ்சா, எல்.எஸ்.டி., ஆசிஸ் ஆயில் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த போதைப்பொருட்களை கைதிகளுக்கு கங்காதர் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதுபற்றி உடனடியாக பரப்பன அக்ரஹாரா போலீசாருக்கு, சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து கங்காதரை கைது செய்தனர். விசாரணையில், அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல்நிலை ஊழியராக வேலை செய்தது தெரிந்தது.

மேலும் கைதிகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி சென்று விற்க முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து எல்.எஸ்.டி., ஆசிஸ் ஆயில் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் மீது பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரப்பன அக்ரஹாரா சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News