பரபரப்பு.. நடு ரோட்டில் பெண் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு.. கணவர் கைது..!

பரபரப்பு.. நடு ரோட்டில் பெண் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு.. கணவர் கைது..!

Update: 2022-03-02 05:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அருள்ஞான புரத்தை சேர்ந்தவர் அஜீஸ் (45). இவரது மனைவி சாந்தி (30). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, அஜீஸ் - சாந்தி ஆகிய இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை சாந்தி தனது ஸ்கூட்டரில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார். இறச்சகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் அஜீஸ் வந்தார். அவர் திடீரென சாந்தியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றிய நிலையில் அஜீஸ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சாந்தியின் வலது கையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சாந்தி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனே அஜீஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, காயமடைந்த சாந்தியை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, பெண் வக்கீலை வெட்டிய கணவர் அஜீஸ் அரிவாளுடன் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் வக்கீலை நடுரோட்டில் வைத்து அவருடைய கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News