கர்நாடகாவில் பரபரப்பு..!! 21,000 பேர் தேர்வு எழுதவில்லை..!!
கர்நாடகாவில் பரபரப்பு..!! 21,000 பேர் தேர்வு எழுதவில்லை..!!
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.
அறிவித்தபடி நேற்று பொதுத்தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் 3-ம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடந்தது. நேற்று கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட முதல் மொழி தேர்வுகள் நடந்தது.
ஹிஜாப் விவகாரத்தாலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும் தேர்வுகள் நடந்த கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பொதுத்தேர்வுக்கு ஒரு சில பகுதிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.ஒரு சில இடங்களில் ஹிஜாப்புடன் தேர்வு அறைக்குள் நுழைய முயன்ற மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் ஹிஜாப்பை கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 மாணவர்கள் தகுதியாகி இருந்தனர். இதில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு ஆஜராகினர். ஆனால் 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை. கடந்த ஆண்டு தேர்வுக்கு வராத மாணவர்களோடு ஒப்பிடும் போது 45.7% பேர் அதிகம் என கூறப்படுகிறது.