திருவள்ளூரில் பரபரப்பு.. பெண் பஞ்சாயத்து தலைவரை சேற்றில் புரட்டியெடுத்த மாஜி தலைவர்..!
திருவள்ளூரில் பரபரப்பு.. பெண் பஞ்சாயத்து தலைவரை சேற்றில் புரட்டியெடுத்த மாஜி தலைவர்..!
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள அத்தங்கி காவனூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர் சாந்தி (46).
இவர், இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பணிகள் மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆர்டர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் தங்கராஜ் மற்றும் அவரது உறவினர்கள், சாந்தி ஆர்டர் பெற்ற இடத்தில் உழுது பயிர் செய்துள்ளனர்.
இதையறிந்து அங்கு வந்த சாந்தி, அவரது மகன் கவியரசு ஆகியோர், ‘இந்த நிலத்தில் பயிர் செய்வது நியாயமா..? இது, அரசு புறம்போக்கு நிலம்’ என தங்கராஜிடம் கூறியுள்ளனர்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை,ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால், போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், ஏராளமான பொதுமக்கள் வெங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோரை அழைத்து வந்து முறையாக விசாரணை மேற்கொள்வோம் என்று உறுதி கூறினார்.
அதன் பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இந்தப் பிரச்சனையால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.