அரசியலில் பரபரப்பு.. காங்கிரசில் இருந்து கம்பி நீட்டினார் மாஜி மத்திய அமைச்சர்..!

அரசியலில் பரபரப்பு.. காங்கிரசில் இருந்து கம்பி நீட்டினார் மாஜி மத்திய அமைச்சர்..!

Update: 2022-02-16 12:06 GMT

முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஸ்வினி குமார், அக்கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அஸ்வினி குமார் (69). வழக்கறிஞராக பணியாற்றிய இவர், பஞ்சாபில் இருந்து காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 46 ஆண்டுகளாக காங்கிரசில் பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: “நீண்ட ஆலோசனைக்கு பின், காங்கிரசில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். தற்போதைய சூழல் மற்றும் என் கண்ணியத்தை கருத்தில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளேன். காங்கிரசில் ஊக்கம் அளிக்கும் தலைமை இல்லை.

சவாலான சூழலில் கட்சி உள்ளது. சரிவை சந்தித்து வருகிறோம் என்பதை அறிந்தும் கட்சியை சீரமைக்க தலைமை தவறிவிட்டது. காங்கிரசுடனான எனது 46 ஆண்டு கால நீண்ட உறவு இத்துடன் முடிவுக்கு வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

தன் விலகல் குறித்து அஸ்வினி குமார் கூறுகையில், “கட்சியில் இருந்து விலகுபவர்கள் மீது குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு, காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதில் இறங்க வேண்டும்'' என்றார்.

காங்கிரசில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, சுஷ்மிதா தேவ், லுாசின்ஹோ பெலாரியோ, ஆர்.பி.என்.சிங் என பல மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து அஸ்வினி குமார் தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News