சேலம் அருகே பரபரப்பு..!! பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!
சேலம் அருகே பரபரப்பு..!! பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கோகிலவாணி என்பவர் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். யாரிடமும் பேசாமல் நீண்ட நேரம் மவுனமாக இருந்த அவர், வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டுள்ளார். பின்னர் 2வது மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்ற மாணவி திடீரென இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு திரண்ட பள்ளி ஆசிரியர்கள், படுகாயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவியின் இந்த முயற்சிக்கு என்ன காரணம் என சரிவர தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளரை சந்தித்து கூறியதாவது, பள்ளி மாணவியிடம் முழுமையாக விசாரித்துவிட்டோம். குடும்பப் பிரச்சினை காரணமாகவே மாணவி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 2வது மாடியில் இருந்து குதித்ததில், சிறுமியின் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை நன்றாக உள்ளார். மாணவியின் மனநிலை அறிந்து அவருக்கு கவுன்சிலிங் வழங்கி வருகிறோம் என்று கூறினார்.