உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு..!! 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!!
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு..!! 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாலி புதுகாலணி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1 முதல் 8-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட 1 மணி நேரத்திலேயே 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தலைச்சுற்றல், வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை வாகனங்கள் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அதிகாரி கலைச்செல்வன் ஒன்றிய கல்வி அதிகாரி மற்றும் வட்டாட்சியர் காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, படிஅக்ரகாரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில், சத்துமாத்திரை சாப்பிட்ட 43 மாணவர்கள் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.