இதை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை.. ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை..!

இதை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை.. ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை..!

Update: 2022-02-03 14:10 GMT

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி, மாணவர்களை சுழற்சி முறையில் குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் தினமும் மூன்று பாட வேளைகளில் மட்டுமே பாடம் நடத்தி விட்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.

பல பள்ளிகளில் அரை நாள் மட்டுமே வேலை நாளாக பின்பற்றுவதாகவும், அதிலும் மாணவர்களை வர வைக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு வழக்கமான எட்டு பாட வேளைகளில் வகுப்புகளை நடத்த வேண்டும்.

முடிந்தவரை மாணவர்களை சற்று இடைவெளி விட்டு அமர வைத்து, அதேநேரம் முழு அளவில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்த வேண்டும்.

அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.

பாடங்களை முடிக்க மிக குறுகிய காலமே உள்ளதால், கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தாமல், பெயரளவில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து பள்ளிகளிலும் முழு நாளும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களையும் பள்ளிக்கு வரச் சொல்லி நேரடி வகுப்பில் பங்கேற்கச் செய்ய வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News