குடும்ப பிரச்னை : வானத்தை நோக்கி சுட்ட ராணுவ வீரர் கைது!!
குடும்ப பிரச்னை : வானத்தை நோக்கி சுட்ட ராணுவ வீரர் கைது!!
தேனி மாவட்டத்தில் தாய், மனைவியிடம் பிரச்னை செய்தவர்களை மிரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர்.
போடி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பவர் இந்திய ராணுவத்தில் மேற்கு வங்க இராணுவ படைப் பிரிவில் அவில்தாராக உள்ளார். அவர் விடுமுறையில் சொந்த ஊரான போடிக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் போடி சர்ச் தெருவில் வசித்துவரும் தீனதயாளன் (26) முருகனின் மனைவி சரவண பிரியாவை (26) கிண்டல் செய்துள்ளார். இது குறித்து சரவணப்பிரியா தனது கணவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து முருகன் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் உடனடியாக தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் இரு குடும்பத்திற்க்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் முருகனின் தாயார் முத்துலெட்சுமி மற்றும் அவரது மனைவி சரவணப்பிரியா தனியாக வந்த போது, தீனதயாளனின் தந்தை மணிவண்ணன் மற்றும் தாய் ஞான ஒளி வழிமறித்து முத்துலெட்சுமியின் சேலையை பிடித்து இழுத்து அரிவாளை காட்டி மிரட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முருகன் தன் கையில் இருக்கும் துப்பாக்கியை கொண்டு வானை நோக்கி சுட்டு மணிவண்ணன் குடும்பத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மணிவண்ணன் போலீசில் புகார் செய்ததை அடுத்து முருகனிடம் விசாரணை நடத்தினர். மேலும் முருகன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மணிவண்ணன் மற்றும் ஞான ஓளி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
newstm.in