குடும்ப பிரச்சனை.. பஞ்சாயத்து செய்யபோன இந்து முன்னணி நிர்வாகி அடித்துகொலை !!
குடும்ப பிரச்சனை.. பஞ்சாயத்து செய்யபோன இந்து முன்னணி நிர்வாகி அடித்துகொலை !!
இரு குடும்பத்தினரிடையே உள்ள பிரச்சனையை தீர்க்க பஞ்சாயத்து செய்யசென்ற இந்து முன்னணி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த குமரவேல்(30) என்பவர், இந்து முன்னணியின் வடக்கு நகர செயலாளராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் - வளர்மதி தம்பதி குமரவேலுக்கு அறிமுகமானவர்கள். இந்த தம்பதியின் வீட்டருகே நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரஞ்சித்- கவிதா தம்பதி சில மாதங்களுக்கு முன்பு குடியேறினர்.
இரு குடும்பத்தினரும் நெருங்கி பழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், சுய உதவி குழு மூலம் வளர்மதி, கவிதாவுக்கு கடனுதவி செய்துள்ளததாகவும், ஆனால் வாங்கிய கடனை கவிதா கடந்த 5 மாதங்களாக திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இருதரப்பினரிடையே பிரச்சனை எழுந்தது.
இந்த விவகாரத்தில் பிரவீன் சார்பாக இந்து முன்னணி நிர்வாகி குமரவேல் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்நிலையில், நேற்று ரஞ்சித் -கவிதா தம்பதி யாருக்கும் தெரியாமல் வாடகை வீட்டை காலி செய்ய முயன்றனர். வீட்டு சாமான்களை சரக்கு வாகனத்தில் ஏற்றியதை அறிந்த வளர்மதி தம்பதியினர் குமரவேலுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அவரும் அங்கு சென்று கடனை திருப்பி செலுத்தாமல் வீட்டை காலி செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இதில் இருதரப்புக்கும் வாய் தகராறு முற்றிய நிலையில், ரஞ்சித்தும், அவருடன் இருந்த நபர்களும் இரும்பு கம்பியால் குமரவேல் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் அதே இடத்தில் குமரவேல் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதையடுத்து, தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் குமரவேலை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர். இருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பதற்றமான சூழல் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in