செல்போனால் சிதைந்த குடும்பம்- பட்டதாரி பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. கணவர் கைது !!
செல்போனால் சிதைந்த குடும்பம்- பட்டதாரி பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. கணவர் கைது !!
ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஜெயக்குமார் (40)- சசிகலா தம்பதி வசித்துவந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். கணவர் ஜெயக்குமார் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
பி.எஸ்.சி, பி.எட் பட்டதாரியான சசிகலா, ஆசிரியர் வேலைக்கு செல்வதற்காக தகுதிதேர்வு எழுதுவதற்காக கடந்த சில மாதங்களாக கோச்சிங் கிளாஸ் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சசிகலா நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த கணவர் ஜெயக்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது சடலத்துடன் ஜெயக்குமார் தனது சொந்த ஊரான கோவிந்தராஜபாளையத்திற்கு சென்றுள்ளார் . அங்கு கிராம மக்கள் சந்தேகமடைந்து, சசிகலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பெரும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நேரில் சென்று பார்த்து பின்னர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சசிகலாவின் சடலத்தை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . இதனிடையே வீட்டில் இருந்த ஜெயக்குமார் திடீரென தலைமறைவானார். இது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது. அதேநேரத்தில் சசிகலாவின் பெற்றோர் அவரது உடலை பெற்று அடக்கம் செய்தனர்.
இதனிடையே தலைமறைவான ஜெயக்குமார் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் அங்கு விரைந்து அவரை கைது செய்தனர். அவடம் விசாரணை மேற்கொண்டதில் சசிகலாவை கொலை செய்ததை ஜெயக்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஜெயக்குமாரும், சசிகலாவும் அரசு கல்லூரியில் படித்த போது காதலித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மனைவியின் நடத்தையில் ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அருகே கிடந்த கயிற்றை எடுத்து சசிகலாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் . பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளதாக அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சசிகலாவின் சடலத்தை போலீசுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரியாமல் எரிக்க முயன்ற போது சிக்கியுள்ளார். ஜெயக்குமாருக்கு உதவியாக இருந்த அவரது பெரியப்பா செல்வராஜ் ( 55 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே காதல் மனைவியை கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in