பிரபல யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது..!!
பிரபல யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது..!!
சிறுவாச்சூர் பகுதியில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. 2000 வருடங்களுக்கு மேல் பழைமையான இந்த கோவில் சோழர்கள் ஆட்சியின் போது நன்கு கட்டப்பட்டு, அவர்கள் விரும்பி வணங்கிய கோவிலாக இந்த மதுரகாளியம்மன் கோவில் இருந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் இக்கோவில் சிலைகள் உடைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கோவில் சிலைகளை மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான் சேதப்படுத்தியதாக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சிலைகளை உடைத்தது சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடரந்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்தி கோபிநாத் சிறுவாச்சூர் கோவிலை சீரமைக்க போவதாக கூறி, வசூலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதை காரணமாக வைத்து இணையதளம் வழியாக ரூ.50 லட்சம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.
மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை சீரமைக்க ஒருவர் எப்படி தனிப்பட்ட முறையில் நிதி வசூல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. எனவே பணம் வசூலித்து கார்த்திக் கோபிநாத் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோவிலை சீரமைப்பதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.50 லட்சம் நிதி வசூலித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் அவரிடம் சுமார் 6 மணி நேரம், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், ஜுன் 13-ம் தேதி வரை கார்த்திக் கோபிநாத்தை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க அம்பத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.